Tuesday, June 29, 2010

அதிரையில் இரயில் மறியலுக்கு முயன்ற 20 பேர் கைது

அகலப்பாதை அமைக்க வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் அதிரை சுற்றுவட்டார மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இந்தப் பகுதி மக்களின் வேண்டுகோளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதனால் இன்று இரயில் மறியல் போராட்டத்தை அதிரை போராட்டக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இன்று சுமார் 500 பேர் இரயில் மறியல் செய்ய காலை 10 மணிக்கு இரயில் நிலையம் நோக்கி சென்றனர். அவர்களில் 20 பேரை மட்டும் கைது செய்து சாரா கல்யாண மன்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதிரை வழியாக இன்று செல்லும் அனைத்து இரயில்களும் சென்ற பிறகே அவர்கள் விடுவிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்றிரவே சிலரை போலிசார் கைது செய்ய இருந்ததாக அறிய முடிகிறது.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, June 28, 2010

இனி தமிழ் யூனிகோடு எழுத்துருதான்

இனி யூனிகோடு எழுத்துருதான் கணினிகளில் பயன்படுத்தப்படுவதற்கான தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ குறியீடு என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவையில் செம்மொழி மாநாட்டில், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் டேவிதார், ஒரு ஆணையை வெளியிட்டார்.

அந்த ஆணையில், இனி தமிழக அரசு, டிஏஎம் (டேம்), டிஏபி (டேப்) மற்றும் பிற பிரத்தியேக 8 பிட்' குறியீடுகளில் இருந்து 16 பிட் தமிழ் யூனிகோடுக்கு (ஒருங்குறி) மாறவேண்டும்; 16 பிட் தமிழ் யூனிகோட் மட்டுமே ஒரே அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக்குறியீடாக இருக்கும்.

எந்த மென்பொருள்களில் எல்லாம் தமிழ் யூனிகோடு வேலை செய்யவில்லையோ அல்லது முழுதாக தெரியவில்லையோ, அந்த பயன்பாடுகளில் டிஏசிஆ 16 குறியீட்டை மட்டும் ஒரு மாற்றுக் குறியீடாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, அனைத்து அலுவலகங்களுக்குத் தேவைப்படும் உதவிகளை அரசு செய்யும். தற்போது டிஜிட்டல் வடிவத்தில் உள்ள ஆவணங்களும் யூனிகோடு எழுத்துருவுக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, June 26, 2010

உமர்தம்பிக்கு விருது வழங்கப்பட்டது

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பிக்கு ‘தமிழ் இணைய அறிஞர்’ என்ற விருது இன்று மாலை 6:00 வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக இவ்விருது வழங்கப்பட்டது, தமிழ் இணைய உலகில் பிரபல்யமான தமிழ் இணைய ஆர்வளர் திரு.பாலா பிள்ளை அவர்கள் விருதை வழங்கினார்கள், உமர்தம்பி அவர்களின் மூத்த சகோதரர். அப்துல் காதர் அவர்களும், உமர்தம்பி அவர்களின் மூத்த மகன் மொய்னுதீனும் விருதை பெற்றுக் கொண்டனர்.

ஆட்டு இறைச்சி

உலகில் பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும் உணவு இது. ஆட்டு இறைச்சியில் கொழுப்பு (Fat) சற்று அதிகம். ஆட்டின் அனைத்து பாகங்களுமே உணவாக உட்கொள்ளப்படுகின்றது. மருத்துவ ரீதியாக ஒவ்வொரு பாகமும் உடலுக்கு ஒவ்வொரு பலனைக் கொடுக்கின்றது.
ஆட்டிறைச்சி வாங்கும் போது மிகவும் பார்த்து வாங்குதல் அவசியம். இளம் ஆட்டின் கறி சுவையாக இருக்கும். மிருதுவாகவும் இருக்கும். கறியின் கொழுப்பு வெண்மை நிறமாக இருத்தல் வேண்டும். மஞ்சள் நிறமாக இருந்தால் சற்று முற்றின ஆடு என்று கொள்ளலாம். கறியின் நிறம் சற்று மங்கிய சிவப்பாய் இருக்க வேண்டும். முற்றின கறியாக இருந்தால், சிறிது வினிகர், எலுமிச்சை சாறு சேர்த்து வேக வைப்பதின் மூலம் சற்று மிருதுவாக்கலாம். ஆட்டு இறைச்சி 100 கிராம் உண்பதில் அடங்கியுள்ள சத்துக்கள்
சக்தி (Energy) 118 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture) 74.2 கிராம்
புரதம் (Protein) 21.4 கிராம்
கொழுப்பு (Fat) 3.6 கிராம்
தாதுக்கள் (Minerals) 1.1 கிராம்
கால்சியம் (Calcium) 12 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 193 மி.கி
போலிக் அமிலம் (Folic acid) 4.5 மை.கி
Source: National Institute of Nutrition - Hyderabad

Friday, June 25, 2010

கடற்கரை தெரு ஜும்ஆ பள்ளி திறப்பு விழா

கடற்கரை தெரு ஜும்ஆ பள்ளி திறப்பு விழா
நாள்:02-07-2010 .வெள்ளிகிழமை நேரம்:காலை 9.௦௦.மணி
தலைமை:மௌலவிஅல்ஹாஜ்.L.M.S. முகம்மது அப்துல்காதர் ஆலிம் அவர்கள், வக்பு சம்பந்தமான அறிவிப்பு /துஆ
மெளலான மௌலவி அல்ஹாஜ்:K.T.முகம்மது குட்டி ஹழரத் அவர்கள்.
முதல்வர்,அல்மதரஸாதுர் ரஹ்மானியாஅரபிக் கல்லூரி.
வாழ்த்துரை:
அல்ஹாஜ் K.M.காதர் முகைதீன் அவர்கள் EX.MP
தலைவர்.இந்திய யுனியன் முஸ்லிம் லிக்.
அல்ஹாஜ்M .அப்துல் ரஹ்மான்.MA.MP
வேலூர் பாராளமன்ற தொகுதி.
அல்ஹாஜ்J .M .ஆருண்.MP
தேனி பாராளமன்ற தொகுதி.
சிறப்புரை:
மெளலான மௌலவி அல்ஹாஜ்.A .முகம்மது ஷபீர் அலி ஹழரத் அவர்கள்,
நிறுவனர்/முதல்வர் ஜாமீஆ மதினத்துல் இல்மு.சென்னை.
மெளலான மௌலவி P.A .ஹாஜா முகைதீன்அவர்கள்,
முதல்வர்.உஸ்மானிய்யா அரபிக்கல்லூரி,மேலப்பாளையம்.
இங்ஙனம்.
கடற்கரை ஜும்ஆபள்ளி திறப்பு விழா கமிட்டியாளர்கள்.
கடற்கரை தெரு முஹல்லா வாசிகள்,அதிரை.

Thursday, June 24, 2010

'தேனீ' உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் - இணைய மாநாட்டில் விருது

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் உலக இணையத் தமிழ் மாநாட்டில் மர்ஹூம் உமர்தம்பி அவர்களின் தமிழ் கணிமைத் தொண்டை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அமைச்சர் திரு.ஆ.ராசா மற்றும் தமிழறிஞர்கள்,தமிழ்ச் சான்றோர்கள் முன்னிலையில் சிங்கப்பூர் அமைச்சர் திரு.ஈஸ்வரன் அவர்கள், உமர்தம்பியின் மூத்த சகோதரர் ஜனாப் அப்துல் காதர் காக்கா அவர்களிடம் உமர்தம்பி அவர்களுக்கான அங்கீகார விருதை வழங்க உள்ளார். உமர்தம்பி அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்த தமிழக முதல்வர் மு.கலைஞர் அவர்களுக்கு ADIRAIDAILYNEWS சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

Wednesday, June 23, 2010

மனித உருவில் ஆட்டுக்குட்டி காண மக்கள் கூட்டம்

ஆத்தூர் அருகே, மனித உருவில் இறந்தே பிறந்த ஆட்டுக்குட்டியை ஏராளமானோர் பார்த்து வியந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி பைத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். 50க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நிறைமாத சினையாக இருந்த ஆடு, நேற்று அதிகாலை 5 மணியளவில் கடும் சிரமத்துடன் குட்டியை ஈன்றது. பிறந்த ஆட்டுக் குட்டி மனித உருவத்தில் இறந்தே பிறந்ததை கண்ட வெற்றிவேல் அதிர்ச்சியடைந்தார். ஆட்டுக் குட்டியின் உடலில் முடிகள் இல்லை. ரப்பர் பொம்மை குழந்தை போல காணப்பட்டது. தகவலறிந்த அப்பகுதியினர், அதிசய ஆட்டுக் குட்டியை வியப்புடன் பார்த்துச் சென்றனர். கால்நடை மருத்துவ ஆய்வாளர் சேகரன், ஆட்டுக்குட்டியின் உடலை ஆத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு எடுத்து சென்றார்.
கால்நடை மருத்துவர் தேவேந்திரன் கூறியதாவது: ஒரே வகையான கிடா ஆடு மூலம் பெட்டை ஆடுகளுக்கு இனவிருத்திக்காக கருவூட்டல் செய்கின்றனர். மரபணு கோளாறு காரணமாக உடல் முழுவதும் நீர் நிரம்பி, ரப்பர் போன்ற குட்டி பிறந்துள்ளது. ஆடு சினை பிடிப்புக்கு வேறு கலப்பின கிடாவை பயன்படுத்த வேண்டும். மனித இனத்தில் நெருங்கிய உறவு முறையில் திருமணம் செய்தால் குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பது போல, ஆடுகளுக்கும் இனவிருத்தியில் குறைபாடு ஏற்படும். ஆத்தூரில் பிறந்த ஆட்டுக் குட்டி மனித உருவத்தில், ரப்பர் குழந்தை போல் உள்ளதால் பரிசோதனை செய்யவுள்ளோம். இவ்வாறு தேவேந்திரன் கூறினா

Monday, June 21, 2010

அதிரைக்கு கிடைத்தது அங்கீகாரம்

உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டி நான் ஒரு பதிவை என் வலைதளமான கலைச்சாரலில் April 21, 2010 8:59.க்கு போட்டேன். அதில் நிறைய சகோதரசகோதரிகளின்ஆதரவும்இருந்தது. அத்துடன் அப்பதிவிலேயே சகோதரர் காஞ்சி முரளி அவர்கள் வலைத்தளப் பதிவில் போட்டால் மட்டும் போதாது. இக்கோரிக்கை நேரடியாகவோ அல்லது பேக்ஸ் மூலமாகவோ தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் இது அரசு சம்மந்தப்பட்டது எதையும் நேரடியாக செய்யவேண்டும் என்றார்கள். அதனால் அவர்களை மெயில்மூலம் தொடர்புகொண்டு என்ன செய்யவேண்டுமென விபரம் கேட்டேன். அவர்கள் மெயில் ஐடிகள் தந்தார்கள்.

இதை இப்படி இப்படிசெய்யவேண்டும். இன்ன இன்னாருக்கு கடிதம் அனுப்பவேண்டுமென விபரமாக சொன்னார்கள். அவர்கள்சொன்னதுபோல் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு . Tue, Apr 27, 2010 at 6:40 AM அன்று கடிதம் எழுதினேன்

அக்கடிதத்தோடு, நான் கலைச்சாரலில் போட்ட பதிவிற்கு ஆதரவு தெரிவித்த அத்தனை கருத்துரைகளையும் சேர்த்து மாண்புமிகு துணை முதல்வர் வலைதளத்தின் தலைமை நிர்வாகியான திரு ஹசன் முகம்மது ஜின்னா அவர்களுக்கு, துணை முதல்வர் பெயரில்

Wed, 5 May 2010 10:23:11அன்று உமர் தம்பி தொடர்பான கோரிக்கை அனுப்பினேன்...
இதுதான் நான் துணை முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவிலிருந்து சில.
""மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சார் திருமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு...
என் அன்பான வாழ்த்துக்களுடன்...
வலைதள தமிழை பயன்படுத்தும் தமிழன் என்ற முறையில்,
ஓர் தமிழனுக்கு ஓர் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்க்கு,
தாங்கள் 'கோவை உலக தமிழ் செம்மொழி மாநாட்டில்' அங்கீகாரம் கிடைக்கும் - தாங்கள் நிச்சயம் செயல்படுத்தி காட்டுவீர்கள் எனும் நம்பிக்கையில் தங்கள் முன் இக்கோரிக்கை மனுவினை அயல்நாடு வாழும் தமிழர்களின் சார்பாக
இக்கோரிக்கை மனுவினை தங்கள் முன் வைக்கிறேன்...
அனுப்புனர்:
திருமதி. மலிக்காஃபாரூக்

http://www.niroodai.blogspot.com/

Sunday, June 20, 2010

பண பற்றாக்குறை-காரணம் என்ன?

பண பற்றாக்குறை !!!
நான்
1000 ரூபாய் சம்பளம் வாங்கும்போது பற்றாக்குறை தான்;
5000 ரூபாய் சம்பளம் வாங்கும்போது பற்றாக்குறை தான்;
10000 ரூபாய் சம்பளம் வாங்கும்போது பற்றாக்குறை தான்;
இப்போது 100000 (1லட்சம்) ரூபாய் சம்பளம் வாங்குகிறேன்.
ஆனாலும் அதே பற்றாக்குறை. என்ன நடக்குது இங்கே???
அப்போது தான் எனக்கு ஒன்று தெளிவாக புரிந்தது ,
பற்றாக்குறை சம்பளத்தில் இல்லை.நமது மனதில்தான் திட்டமிடல் இல்லாமை என்கிற பற்றாக்குறை இருக்கிறது என்று.
போதுமென்ற மனம் இல்லாத பற்றாக்குறை:நான் சென்னை வரும் முன்பு, தூத்துக்குடி பேருந்தில் பயணம் செய்யும் போது, ஒரு சென்னை நண்பரிடம் கேட்டேன்,சென்னையில் விலைவாசி அதிகம் என்று கூறுகிறார்கள், நான் சென்னையில் குடியேற நினைக்கிறேன்..சமாளிக்க முடியுமா என்று, அவர் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது.சென்னையில் ரூ1000 வைத்து குடும்பம் நடத்த முடியும்..ரூ100000(1 லட்சம்) வைத்தும் குடும்பம் நடத்த முடியும்.அந்த திட்டமிடல் உன் கையில் தான் இருக்கிறது என்றார்.
அவருடைய வார்த்தைகளை அப்போது கேட்டிருந்தால் இன்று நான் எவ்வளவோ சேமித்திருக்கமுடியும். என்ன செய்வது…சென்னை வந்த பிறகு உற்றார்,நண்பர்கள் எல்லாம் தவறாக நினைப்பார்களோ என்று வாடகை வீட்டையும் அல்லவா அழகு படுத்தினேன்.வீட்டுக்கு வரவங்க நம்மை மதிக்க வேண்டும் என்று தேவை இல்லாவிட்டாலும் ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்தேன்.பணம் எல்லாம் இப்படி தேவையற்ற விஷயங்களில் முடங்கி போனது.மருத்துவ அவசரம் என்றாலோ, குழந்தைகளின் கல்விக்கான கட்டணம் கட்டவேண்டி வந்தாலோ திணற வேண்டியிருக்கிறது.இதையே நான் வங்கியில் சேமித்து இருந்தால் அவசர தேவைக்கு தடுமாற்றம் இன்றி சமாளித்திருக்க முடியும்.

” நம் வீட்டு வாசலை மட்டும் பார்க்கவேண்டும் ,
பக்கத்து வீட்டு வாசலை பார்த்து போட்டியிட்டால்,
மேலே சொன்ன பற்றாக்குறை நம் வாழ்வில் வரும்”

எளிமையான வாழ்க்கையில் தான் உண்மையான மனமகிழ்ச்சி இருக்கிறது என்பதை தாமதமாக உணர்வது மனிதனின் குறைபாடு.பணத்தை சேமித்த பின்பு வாங்கி மகிழலாம் என்கிற பிடிவாதம்,கடன் வாங்கியாவது இதை வாங்கியே தீருவேன் என்கிற பிடிவாதத்தை விட சால சிறந்தது.

Saturday, June 19, 2010

ஜெர்மனிக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தது செர்பியா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செர்பியா 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனிக்கு அதிர்ச்சித் தோல்வியை அளித்தது. இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. இதில் பலம் வாய்ந்த அணியான ஜெர்மனி, செர்பியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். இதனால்அவ்வப்போது இரு அணி வீரர்களும் மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டனர். முதல் பாதி ஆட்டம் முடிவடைய 7 நிமிடங்கள் இருந்தபோது மெக்சிகோ வீரர் மிலன் ஜொவானோவிக் கோல் அடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தார். முதல் பாதி ஆட்டநேர முடிவில் செர்பியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சியை செர்பியா வீரர்கள் தடுப்பாட்டத்தால் தகர்த்தனர். ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பையும் ஜெர்மனி தவறவிட்டது. இறுதியில் ஜெர்மனி 0-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் க்ளோஸ், ரெட் கார்டு பெற்று ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஜெர்மனி தரப்பில் 3 வீரர்களும், செர்பியா தரப்பில் 4 வீரர்களும் மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டனர்.
முதல் ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடி 4-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது

Friday, June 18, 2010

இரயில் போராட்டம்

முக்கிய அறிவிப்பு
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)

நமது ஊரைத்தொடர்ந்து அறந்தாங்கி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களின் குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்க கடந்த 10,15 வருடங்களாக பல துறைகளிலும் கோரிக்கை மனுக்களை கொடுத்தும் பலன் என்னவோ........

............பனை மரத்து நிழலானதேதான் மிச்சம்........

ஆகவே அவசர - அவசியமாக ஆளுவோரையும், அதிகாரிகளையும் சந்தித்த வேளையில், நல்ல தருணம் எதிர்வருவதால் தயவு செய்துபலதரப்பட்ட பகுதி வாழ்பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் முன்னின்று ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு கொடுக்க வேண்டிய அரிய சூழ்நிலை கனிந்துள்ளது.

எனவே, வரும் 29.06.2010 அன்று அனைவரும் கலந்து கொள்ள வேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


இப்படிக்கு,
அதிராம்பட்டினம் சமூக நலப்பேரவை
அதிராம்பட்டினம்

--------------------------------------------------------------------------------

குறிப்பு: முஹல்லா வாரியாகப் பொறுப்பாளர்களை தெரிந்தெடுக்க வேணுமாய் குறிப்பு அனுப்பியுள்ளோம். ஆகவே, விரைவில் தெரிந்து எடுக்க வேண்டியது.

தேதி 29-06-2010 அதிராம்பட்டினம்

நன்றி:அதிரை எக்ஸ்பிரஸ்

Monday, June 14, 2010

உமர்தம்பி அவர்களின் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

தமிழ்கணிமைக் கொடையாளர் மர்ஹூம் அதிரை உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது.24.06.2010. அன்று நமது உமர்தம்பி அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகள்:
தமிழ் மின்தரவு மற்றும் மின்னகராதிகள்
உமர்தம்பி அரங்கம்

தலைமை:திரு.எம்.மணிவண்ணன்.சைமன்டெக்கார்ப்பரேஷன்.

மாலை:4.௦௦மணிமுதல்4.30.வரை:தமிழ்மரபு சார்ந்த தகவல்களின் தகவல்வங்கி, மின்நூல்கள்,ஓலைச்சுவடிகளின் ஒருங்கினைக்கபட்ட இணையஅட்டவனை.
செல்வி.சுபாஷினி டிரம்மல்,hewlett ,packard ஜெர்மனி.

மாலை:4.30.மணிமுதல்5.௦௦.வரை:தமிழ்மின்னணு பெட்டக மேலாண்மை.
திரு.பி.ஆசாதுல்லா mazharululoom college.
ஆம்பூர்.

மாலை:5.௦௦.மணிமுதல்5.30.வரை:மின்னணு அருங்காட்சியகம்.
திரு.மறைமலை இலக்குவனார்.
மாநிலகல்லூரி,சென்னை.

மாலை:5.30.மணிமுதல்6.௦௦.வரை: தமிழ் விக்கிப்பீடியா என்னும் தமிழ்க் கலைக்களஞ்சியம்.
திரு.தேனி.எம்.சுப்பிரமணி .

Sunday, June 13, 2010

கண்ணை காக்கும் டிவி வருகிறது அருகே குழந்தை வந்தால் திரையில் படம் தெரியாது

டிவியின் அருகில் சென்று குழந்தை படம் பார்ப்பதால், கண் கெட்டு விடுமே என்று கவலைப்படுபவரா நீங்க...? இனி, குறிப்பிட்ட தூரம் அருகில் வந்தால் டிவி தானாகவே படம் காட்டாது. குழந்தை, பின்னால் சென்றால் மட்டுமே டிவி பார்க்க முடியும்.இப்படி ஒரு சூப்பர் ஸ்மார்ட் டிவியை சோனி நிறுவனம் தயாரித்துள்ளது. அடுத்த மாதம் இங்கிலாந்தில் அது விற்பனைக்கு வருகிறது. பிறகு, இந்தியாவிலும் கிடைக்கும். டிவியை அருகில் இருந்து குழந்தைகள் பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, புதிய தொழில்நுட்பத்தில் இந்த டிவி உருவாக்கப்பட்டுள்ளது.

டிவியில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவி, திரையில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்குள் யாராவது வந்தால் படத் தெளிவைக் குறைத்து புள்ளி புள்ளியாகி விடும். அதைப் புரிந்து கொண்டு குழந்தை தானாவே குறிப்பிட்ட தூரத்துக்கு செல்ல நேரிடும்.

பாதுகாப்பான அந்த தூரத்தில் இருந்து டிவி பார்த்தால் குழந்தையின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது. பேஸ் டிடெக்ஷன் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ள இந்த டிவியின் சென்சாரால் குழந்தைகளையும் பெரியவர்களையும் பிரித்து அடையாளம் காண முடியும்.
திரையின் அருகே 12 வயதுக்கு குறைந்தவர்கள் வந்தால் மட்டுமே படம் காட்ட டிவி அடம் பிடிக்கும். பெரியவர்கள் வந்தால் திரையில் மாற்றமிருக்காது.தவிர, டிவி பார்க்கும் முறைகள் பற்றி திரையில் டிஸ்ப்ளேவும் இடம்பெறும். அறையில் இருப்பவர் எழுந்து சென்று விட்டால், சில விநாடிகளில் டிவி தானாக ஆப் ஆகி விடும் தொழில்நுட்பமும் இதில் உண்டு. இதன்மூலம், மின் சிக்கனம் ஏற்படும்.
நன்றி:திலீப்

Saturday, June 12, 2010

கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர் ஓட்டம்

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி, ஏனாதி ராஜப்பா கல்லூரி, பேராவூரணி வெங்கடேஸ்வரா கல்லூரி, கரம்பயம் மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரி, ஒரத்தநாடு மகளிர் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர் ஓட்டப்பந்தயம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன.
தொடர் ஓட்டப்பந்தயத்தை காதிர் முகைதீன் கல்லூரி தாளாளர் முஹம்மது அஸ்லம் தொடங்கி வைத்தார் . இதில் பேராசிரியர்கள் நாசர், கணபதி, சந்திரசேகரன், ஆங்கில பேராசிரியர் முஹம்மது முகைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Thursday, June 10, 2010

தமிழ் டைப்பிங் செய்வது,யுனிகோட் உமர்தம்பி அவர்கள்

தமிழ் இணையச் சூழலில் பரிச்சயமான பெயர், உமர் தம்பி. இணையத்தில் தமிழ் இதமாக வலம் வருவதற்கு உறுதுணையாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.இணையத்தில் 'தேனீ உமர்', 'யுனிகோட் உமர்' என்று அன்போடு அழைக்கப்பட்டு வரும் அவரது தமிழ்க் கணினித் தொண்டை கெளரவிக்கும் வகையில், எதிர்வரும் கோவை மாநாட்டில் அவருக்கு அங்கீகாரம் அளிக்கப்படுமா என்ற கேள்வியும், உயரிய கெளரவம் அளிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் தான் இன்றைய தீவிர தமிழ் இணையவாசிகளின் உள்ளங்களில் மிகுந்திருக்கிறது.

தமிழ்க் கணினி பயன்பாட்டாளர்களுக்கு பயன் தரும் வகையில் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் தமிழில் நிறைய கட்டுரைகள் தந்துள்ளார். உதாரணமாக...

1. எழுத்த பழகுவோம் HTML, (இன்றும் கணினி அறிவு இல்லாதவர்களுக்கும் புரியும்படி மிக எளிய தமிழில் அருமையான கட்டுரை தந்துள்ளார்.

2. யுனிகோடின் பன்முகங்கள்

3. யுனிகோடு - என் பார்வையில்மற்றும் பல கட்டுரைகள் உமர்தம்பியின் வலைபூவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

//இணையக்கடலில் தமிழை மிகச் சுலபமாக பயணம் செய்ய உதவியவர்களில் முன்னணியில் இருந்த உமர் தம்பிக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகாரம் தருமா?

/தமிழ் தட்டச்சு எல்லோருக்கும் பயனளிக்கிறது.நமக்கும் எவ்வளவு சுலபமாக இருக்கிறது. இதை மறக்க முடியுமா?

இல்லை என்றால் இத்தனை பதிவுகள் தான் போட்டு இருக்க முடியுமா?’

யுனிகோட் உமர் தம்பி அவர்கள்’ கண்டிப்பாக கவுரவிக்க பட வேண்டியவரே//

நன்றி :Jaleela Kamal

Wednesday, June 9, 2010

அப்படி என்னதான் இருக்கிறது கே.எஃப்.சி. சிக்கனில்?

“ப்ரெட்பீஸ் மாதிரி சாஃப்ட். செம டேஸ்ட்” என்று இந்திய நகர்ப்புற மேல்தட்டு இளசுகளின் நாக்குக்கு மோகம் கூட்டுவது கே.எஃப்.சி. சிக்கன். நவீன வேலைப்பாடுகளோடு வடிவமைக்கப்பட்ட ரெஸ்டாரண்டுகள், பரிமாற சுறுசுறுப்பான இளைஞர்கள், உச்சஸ்தாயியில் ஒலிக்கப்படும் மேற்கத்திய இசை, டேபிள் முழுக்க இளசுகளின் ஆக்கிரமிப்பு என்று ஒவ்வொரு கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுமே பார்ட்டி மூடில் பரவசமாக இருக்கின்றன. சாப்பிட வருபவர்களை சத்தம் போட்டு அதிரவைத்து வரவேற்பதிலேயே கே.எஃப்.சி.யின் கஸ்டமர் கேர் தொடங்கிவிடுகிறது.
அப்படி என்னதான் இருக்கிறது கே.எஃப்.சி. சிக்கனில்?
“அது மட்டும் சீக்ரட்!” என்று சிரிக்கிறார்கள் ரெஸ்டாரண்ட் ஊழியர்கள். கே.எஃப்.சி. சிக்கன் உடம்புக்கு நல்லதாம். பதினோரு விதமான மசாலா சேர்மானம் டேஸ்ட்டுக்கு உதவுவதுடன், உடல்நலத்துக்கும் கேரண்டி தருகிறது என்கிறார்கள். இந்த சேர்மான விகித பார்முலா வேறு யாருக்குமே தெரியாதாம். கே.எஃப்.சி.யின் சீக்ரட் எக்ஸ்க்யூடிவ்களுக்கு மட்டுமே தெரியுமாம். எனவே, சிக்கன் சமைக்கும் அந்த பார்முலாதான் கே.எஃப்.சி.யின் ஸ்பெஷல்.

“இதெல்லாம் சும்மா. பொதுவாக சிக்கனை பொறிக்கும் எண்ணெய் அளவுக்கும், கே.எஃப்.சி.யில் பொறிக்கும் எண்ணெய் அளவுக்கும் சற்று வேறுபாடு உண்டு. அதுவுமில்லாமல் 200 டிகிரி செல்ஸியஸ் வெப்ப அளவில் ஒரு நிமிடம் பொறிக்க வைத்து, பிறகு 120 டிகிரி செல்ஸியசுக்கு வெப்பநிலையை குறைப்பார்கள். சர்க்கரை, மாவு, மிளகு, உப்பு – இதுதான் இவங்க சொல்ற சீக்ரட் பார்முலா” என்று வில்லியம் பவுண்ட்ஸ்டோன் என்பவர் பிக் சீக்ரட்ஸ் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். 1930ல் சாண்டர்ஸ் என்பவரால் அமெரிக்காவில் சிறியளவில் துவக்கப்பட்டது இந்த தொழில். மடமடவென்று வளர்ந்து முப்பது வருடங்களில் அமெரிக்காவிலும், கனடாவிலும் 600 கிளைகளாக பெருகியது கே.எஃப்.சி. இன்றைய தேதியில் கிட்டத்தட்ட நூறு நாடுகளில் ஆயிரக்கணக்கான கிளைகளோடு ஆலமரம் மாதிரி வளர்ந்து நிற்கிறது. உலகின் பெரிய உணவு நிறுவனங்களில் கே.எஃப்.சி.க்கு தனியிடம் உண்டு. ஓராண்டுக்கு சராசரியாக நூறு கோடி கோழிகள் கே.எஃப்.சி. கடைகளில் உயிரிழப்பதாக சொல்கிறார்கள்.

கே.எஃப்.சி.யில் பிரதானம் வறுத்த சிக்கன் தானென்றாலும், கிளைகள் அமைந்திருக்கும் நாடுகளுக்கேற்ப அந்தந்த பகுதியின் ஸ்பெஷல் உணவுகளையும், தங்களது டிரேட் மார்க் சுவையில் தருகிறார்கள். சாண்டர்ஸ் ஆரம்பித்த காலத்தில் வறுத்த கறியும், உருளை ப்ரெஞ்ச் சிப்ஸும் மட்டும்தான் ஸ்பெஷல்.

இந்தியாவிலும் பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுகள் திறக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பிஸ்ஸாஹட் ரெஸ்டாரண்டுகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அதற்கு எதிரில் அமையுமாறு கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுக்கு இடம் பார்க்கிறார்கள். இதென்ன லாஜிக் என்றே புரியவில்லை.

நன்றி :புஹாரி

Tuesday, June 8, 2010

மனிதர் உருவாக்கிய முதல் நிலை சாய்ந்த கோபுரம்

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள "கேபிடல் கேட்'என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி துவங்கப்பட்டது. இதற்கு "கேபிடல் கேட்'என பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டடம், 18 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது, பைசா கோபுரத்தின் சாய்மானத்தை விட நான்கு மடங்கு அதிகம். (பைசா கோபுரத்தின் சாய்மானம் 3.99 டிகிரி). இந்த கட்டடத்தின் 12 மாடிகள் செங்குத்தாக உள்ளன.
அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள், படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த அளவில் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் இந்த கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்டபோது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதை கட்டுவதற்கு, 10 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நட்சத்திர ஓட்டல் மற்றும் அலுவலகங்கள் இதில் இயங்கவுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள், இந்த கட்டடத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, June 6, 2010

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தயாராகுவோம்

அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பும், தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பும் இவ்வாண்டு ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறும்.இதற்காக கணக்கெடுப்பாளர்கள் உங்கள் வீடு தேடி வந்து உங்களிடமிருந்து விவரங்களை சேகரிப்பார்கள்.

வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் முக்கிய விவரங்கள்:

குடும்பத் தலைவர் பெயர்,

குடும்பத்திலுள்ள ஆண்கள்,

பெண்கள் மற்றும் மொத்த நபர்களின் எண்ணிக்கை,

வீட்டின் கட்டுமானப்பொருள்,

குடிநீர் வசதி,

சமையல் வசதி, கழிப்பிட வசதி,

குடும்பத்தின் வசமுள்ள பொருள்கள் (சைக்கிள், மோட்டார் சைக்கிள் மொபெட், கார், ஜீப், வேன், டிரான்சிஸ்டர், ரேடியோ, தொலைபேசி, கைபேசி, கணினி போன்றவை)

தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு சேகரிக்கப்படும் விவரங்கள்:

குடும்பத் தலைவரின் பெயர்,

குடும்ப அங்கத்தினர்களின் பெயர்,

ஒவ்வொரு நபரின் பிறந்த தேதி,

திருமண நிலை,

தொழில்,

தந்தை,

தாயார்,

துணைவர் பெயர்,

பிறந்த ஊர்,

தற்போதைய முகவரி,

நிரந்தர முகவரி.

குடும்ப அங்கத்தினர்கள் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருக்கவும்.கணக்கெடுப்பாளர்கள் வரும்போது தேடாமல் இந்த விவரத்தை உடனே கொடுக்க வசதியாக இருக்கும். மாதிரிப்படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Friday, June 4, 2010

குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற கோரி

நமதுஅதிரையைத்தொடர்ந்துஅறந்தாங்கி,முத்துப்பேட்டை,திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களின் குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்க கடந்த 10 ,15 ,வருடங்களாக பல துறைகளிலும் கோரிக்கை மனுக்களை கொடுத்தும் பலன் கிடைக்கவில்லை.
ஆகவேஅவசர- அவசியமாக ஆளுவோரையும் அதிகாரிகளையும் சந்தித்த வேலையில்,நல்ல தருணம் எதிர் வருவதால் தயவு செய்து பலதரப்பட்ட பகுதி வாழ் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் முன்னின்று ஆர்ப்பாட்டம் நடத்திகோரிக்கை மனு கொடுக்க வேண்டிய அரியசூழ்நிலை கனிந்துள்ளது.
எனவே, வரும் 29 -06 -2010 .அன்று அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுகொள்கிறோம்
இப்படிக்கு,
அதிராம்பட்டினம் சமூக நலப்பேரவை
அதிரை

ஃபேஸ் புக்''கிற்கு பாடம் புகட்டுவோம்

அஸ்ஸலாமு அலைக்கும்...
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உருவப்படத்தை வரையும் போட்டி என்று ஒன்றை ஆரம்பித்து முஸ்லீம்களை சீண்டிப்பார்க்கிறது ஃபேஸ்புக்.
முஸ்லீம்களின் மூலமாக வருவாய் ஈட்டும் ஃபேஸ்புக்கின் நயவஞ்சகத்தனம் - நன்றி கெட்டத்தனத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்போம். அதை பயன்படுத்துவதை நிலையாகவோ தற்காலிகமாகவோ நிறுத்தி வைப்பதன் மூலம் அதன் வருவாயில் மாபெரும் வீழ்ச்சியை உருவாகுவதன் மூலம் அதற்கு பாடம் புகட்டுவோம்.மூன்று நாட்கள் அதை பயன்படுத்தாமல் இருந்தாலே அதன் வருவாயில் மாபெரும் வீழ்ச்சியை ஏற்படுத்த முடியும். FACE BOOK ன் வருவாயில் 47.5% முஸ்லீம்களால் கிடைக்கிறது. இதன் மதிப்பு 517,000,000 அமெரிக்க டாலராகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நம் முஸ்லீம் சகோதர சகோதரிகள் மூலமா இம் மாபெரும் தொகையை சம்பாதித்து நமக்கே துரோகமிழைக்கும் அதன் கீழ்த்தரமான செயலை கண்டிப்போம்.

Wednesday, June 2, 2010

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள்

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாக இன்னமும்ம் இரண்டு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் தென் ஆபிரிக்காவில் கோலாகலங்கள்,
இப்போதிருந்தே ஆரம்பமாகத் தொடங்கி விட்டன. ஜூன் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 11 ஆம் தேதி வரை 2010 உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகள் இடம் பெறவுள்ளன.
32 நாடுகள், 9 நகரங்களிலுள்ள 10 விளையாட்டு அரங்கங்களில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டிகளில் கலந்து கொள்கின்றன.உலகெங்கும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் நேரிலும் தொலைக்காட்சியிலும் இந்தப் போட்டிகளைக் கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழா என்று வர்ணிக்கப்படும் உலகக் கால் பந்தாட்டப் போட்டிகள் ஒரு ஆபிரிக்க நாட்டில் முதல் முறையாக நடைபெறவுள்ளன. ஆபிரிக்காவின் ஓர் அணி உலகக் கோப்பையை வெல்லுமா என்கின்ற எதிர்பார்ப்பு அந்தக் கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் இருக்கிறது.
இந்த விடயத்தில், மொழி, மதம், இனம், கலாசாரம், அரசியல், போட்டி பொறாமை என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஓர் ஒற்றுமை இருக்கின்றது.நன்மைதரும் போட்டிகள் 'ஃபுட்போல் ஃபோர் ஹோப்' - அதாவது 'ஒளிமயமான எதிர்காலத்துக்காக கால்பந்தாட்டம்' என்கின்ற லட்சியத்துடன் சர்வதேச கால்ப்பந்தாட்டச் சம்மேளனம், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை முன்னெடுத்துச் செல்கிறது.
தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் முடிந்த பிறகும், அது ஏற்படுத்தப் போகும் நன்மைகள் தொடரும் என சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனமான 'ஃபிஃபா' வின் தலைவர் செப் பிளெட்டர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் கல்வி, அதுவும் உதைப்பந்தின் மூலம். அதை விளையடும் இளம் வீரர்கள் மூலம், அவர்களின் ஆரோக்கியத்தின் மூலம் நன்மை ஏற்படப் போகிறது.
ஆரோக்கியம், கல்வி, உதைப்பந்து ஆகிய நன்மைகள் 2010 தொடங்கி 2015 ஆம் ஆண்டு வரை தொடரும். செப் பிளாட்டரின் இந்த அறிவிப்பு உலகமெங்கும் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த முன்னெடுப்பில் 'ஃபிஃபாவுக்கு உதவ உலகின் பல நாடுகள் முன்வந்துள்ளன. 'கால்பந்தின் மூலம் எதிர்காலம்' என்கிற இலட்சியம் ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள அனைவருக்கும் உதவும் என்றும்அவர் கூறியுள்ளார். இந்தத் திட்டங்கள் தென் ஆபிரிக்காவுக்கு மட்டும் உதவி செய்யும் என்றில்லை, ஆபிரிக்கக் கண்டம் முழுவதற்குமே பலன்தரும். ஆபிரிக்கக் கண்டத்தில் இந்த முன்னெடுப்பு நடைபெற்ற பிறகு உலகம் முழுவதும் இந்தத் திட்டம் எடுத்துச் செல்லப்படும்.
புதிய விளையாட்டரங்கங்கள் ஜூன் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 11 தேதிவரை நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை கால் பந்தாட்டப் போட்டியில் 32 நாடுகள் பங்கு பெறுகின்றன. அவை எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. போட்டிகள் 10 மைதானங்களில் நடைபெறும். இவை 9 நகரங்களில் அமைந்துள்ளன. கேப்டவுன், டர்பன், ஜோஹனஸ்பர்க், ப்ளூம்ஃபொண்டைன், போர்ட் எலிசபெத், நெல்ஸ்ப்ரூயிட், பொலக்வானே, ரஸ்டன்பர்க் மற்றும் பிரெட்டோரியா ஆகிய நகரங்களில் போட்டிகள் இடம்பெறவுள்ளன. போட்டிகளுக்காகப் பல புதிய விளையாட்டரங்கங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சாக்கர் சிட்டி. இந்த அரங்கில் தான் 2010 உலகக் கோப்பை போட்டியின் முதல் மற்றும் இறுதி ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன.
கலாபாஷ் எனும் மிகவும் புகழ் பெற்ற ஆப்பிரிக்க பானையின் வடிவத்தை மையப்படுத்தி இந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் 95,000 பேர் அமர்ந்து போட்டிகளைக் கண்டு ரசிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.