Friday, June 22, 2012

online ulagam

ஹைதர் அலீ ஆலிம்சாவைத் தூக்கு!

    No comments:


கடந்த மாதங்களாக அதிரை சித்தீக் பள்ளி விவகாரம் பூதாகரமாக வெளிவந்து கொண்டிருப்பதை அறிவோம். அதனை நாமும் பதிவேற்றி  உள்ளோம் ஆனால் ஏனோ இந்த பதிவை கட்டுரையாளர்  எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவில்லை என்பது புரியாத புதிராக் உள்ளது .

இருப்பினும் இந்த தகவல் சகோதர வலைப்பூவில் இருந்து உரிமையுடன் எடுத்து மீள் பதிவு செய்கிறோம்.
-----------------------------------------------------------------------------------------------------------------
“மனிதர்களே!உங்கள் இறைவனை அஞ்சி வாழுங்கள்...”4:1

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிராம்பட்டினத்தின் புதுமனைத் தெருவில் தற்போது சித்தீக் பள்ளி என்ற பெயரில் வழங்கப்படும் சின்னப்பள்ளிக்குச் சொந்தமான 1 ஏக்கர் 59 செண்ட் (சர்வே 255-2) புகல் இனாம் (வக்ஃபு - TD731-இணைப்பு-1)  நிலத்தின் பகுதிகள் சட்ட விரோதமாக விற்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பதும் அது தொடர்பான அரசு ஆவணங்களின் நகல்கள் ஏற்கனவே வலைத்தளங்களில் வலம் வந்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

அதிரை போஸ்ட் வலைத்தளத்துக்கான நேர்காணலில், மேற்காணும் வக்ஃபு சொத்து குறித்து சகோ.ஜான் முஹம்மது எழுப்பியுள்ள கேள்விகளுக்கு (http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2BwigpNfPIMமற்றும் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=8jRwyGFXUaw#!)இதுவரை யாரும் பதில் தரவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,
"பள்ளி நிர்வாகத்தினர் என்ன செய்வது?" என ஃபத்வா கேட்டு, கடந்த 16.5.2012 நாளிட்டு, சித்தீக் பள்ளி நிர்வாகத்தினர் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரிக்கு எழுதிக் கேட்டனர்.

பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் ஃபத்வா (எண் 194/28-இணைப்பு-2/1)
பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் வினாவில் குறிப்பிட்ட பிரகாரம் வீடுகட்டிக் குடியிருப்பது கூடாது. எனவே,ஜமாஅத் கமிட்டியினர் ஒரு குறிப்பிட்ட காலம் (இத்தனை ஆண்டுகள்) வரை எனத் தேதி குறிப்பிட்டு அவர்களைக் குடியிருக்க அனுமதிக்கலாம். அதுவரையிலும் அவர்களிடமிருந்து சுற்றுவட்டாரங்களில் வசூலிக்கப்படும் வாடகையைக் கவனித்து ஒரு தரைவாடகையை நிர்ணயம் செய்து வாங்கிவர வேண்டும். நிர்ணயம் செய்த காலம் முடிவடைந்ததும் மேற்படி இடத்தைக் கைப்பற்றிக் கொள்ளவேண்டும். மேற்படி நபர்களுக்கு மேற்படி பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தின் விஷயத்தில் "வாடகைதாரர்கள்" என்ற சம்பந்தமின்றி வேறு எந்தவகை சம்பந்தமுமில்லை என்பது எழுத்துபூர்வமான முறையில்,ரிஜிஸ்டர் செய்யப்பட்ட ஒப்பந்தம் மூலம் ஊர்ஜிதம் செய்யப்படவேண்டும். தவிர, வீட்டுவரி, மின்சாரவரி போன்றதையும் பள்ளிவாசல் பெயருக்கு மாற்றவேண்டும். (இணைப்பு-2/2).

சிந்திக்கும் திறனுடைய எல்லாருக்கும் தெரிந்ததை பாக்கியாத் மத்ரஸா ஃபத்வாவாக வழங்கியது. தெள்ளத் தெளிவான இந்த ஃபத்வாவின் அடிப்படையில், அல்லாஹ்வின் மீது அச்சமுள்ள, மறுமையை நம்புகின்ற முஸ்லிம் எவரும் சின்னப்பள்ளியின் வக்ஃபுச் சொத்தில் சொந்தம் கொண்டாடக்கூடாது.

ஆனால்,
அறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர், விற்கவோ வாங்கவோ முடியாத புகல் இனாம் வக்ஃபுச் சொத்தின் பகுதிகளை விற்று/வாங்கி வீடுகள்கட்டிக்கொண்டு, குடியிருந்து கொண்டு அல்லாஹ்வுக்குச் சொந்தமானதை "எங்களுக்குத்தான் சொந்தம்"என உரிமை கொண்டாடுகின்றனர். அது மட்டுமின்றி, 'ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்கள்' என்ற உவமையை உண்மையாக்குவது போல் ஒரு தவறை மறைக்க நூறு தவறுகளைச் செய்வதற்கும் தயங்காமல் வழிதேடி நிற்கின்றனர். கையூட்டுக் கொடுத்துப் போலிப் பட்டா எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியடைந்தாலும் அது நிற்காது என்பதும் சட்ட நடவடிக்கை எடுத்தால் போலிப் பட்டா வழங்கிய அரசு ஊழியர் சிறையில் களி தின்ன வேண்டியிருக்கும் என்பதும் எல்லாருக்கும் தெரிந்த உண்மைதானே!

விற்பனை என்ற பெயரில் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ள வக்ஃபுச் சொத்துகளின் நிலை என்ன?

பாக்கியாத் ஸாலிஹாத் மத்ரஸாவின் ஃபத்வா எண் 145/28 - இணைப்பு-3).
சின்னப்பள்ளிவாசலுக்கு மேற்படி இடம் மானியமாகக் கொடுக்கப்பட்டு, அதற்குரிய ஆவணச் சான்றுகள் இருப்பதும் உண்மையெனில்,மேற்படி இடத்தில் பொதுமக்களின் போக்குவரத்துக்காகப் பாதை அமைப்பது கூடாது. மேலும், மேற்படி நிலத்தை விற்பதும் வாங்குவதும் கூடாது. விற்றாலும் அதுசெல்லுபடியாகாது. எனவே, விற்பனை என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்படி இடத்தின் பகுதிகளை மீட்கவும் மற்றதைப் பாதுகாக்கவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க ஜமாஅத்தாருக்கு முழு உரிமை உண்டு.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கிராம எண் 69,  பெயர் : அதிராம்பட்டணம் - கிராம உரிமை தஸ்தாவேஜி ரிஜிஸ்டர் (ROR)Title Deed No. 684இன்படி 16.04.1934 நாளிட்ட சர்வே எண் 255-2க்கு உரிய 1 ஏக்கர் 59 செண்ட் புஞ்சை நிலம்(TD731),  சின்னப்பள்ளிவாசலுக்குச் சொந்தமான புகல் இனாம் வகை (வக்ஃபு)நிலமாகும் (இணைப்பு-4).

சப்டிவிஷன் ஆகி அந்த மொத்தச் சொத்தும் தற்போது சின்னப்பள்ளிவாசலுக்கான பட்டா எண்264இன் கீழ்62ஏர்ஸ்(62x2.47=1  ஏக்கர் 53.14 செண்ட்) ஆகக்குறைந்துள்ளது.அதன் புதிய புல எண்255-4ஏ ஆகும்(இணைப்பு-5).

மேற்காணும் சர்வே எண் 255-2 நிலத்தின் பகுதியை முதன்முதலில் கிரயம் கொடுத்து வாங்கிய ஏமாளிக்கு வேண்டுமானால், அது வக்ஃபுச் சொத்து என்பது தெரியாமலிருக்கலாம். ஆனால்,முதன்முதலில் அதைத் தன் சொத்து என்று ஏமாற்றி விற்ற யோக்கிய(!)சிகாமணிக்கு அது பள்ளியின் சொத்து என்பது மிக நிச்சயமாகத் தெரியுமல்லவா?.

இறைக் கொள்கை மற்றும் இறுதிநாள் கொள்கை ஆகியவற்றில் தவறான நம்பிக்கை கொண்டுள்ள பிற மதத்தவர், "சிவன் சொத்து, குலநாசம்"எனக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். அல்லாஹ்வாகிய 'அவன்' சொத்து எவற்றையெல்லாம் நாசமாக்குமோ? என அச்சமிருந்தால், மேற்காணும் சர்வே எண் 255-2 நிலத்தில் வீடுகட்டிக்கொண்டு குடியிருக்கும் மேன்மக்கள் தங்கள் அறியாமையையும் அதனால் ஏற்பட்ட தவறுகளையும் ஒப்புக்கொண்டு தத்தம் வீடுகளை, சின்னப்பள்ளி எனும் சித்தீக் பள்ளிக்கு உரிமையாக்கிவிடுவதே முறையாகும் (ச்சிட்டா-இணைப்பு-6).

அதை விடுத்து, மேன்மேலும் தவறுகள் செய்வதைத் தொடர்ந்தால், தவறான வழிகளைத் தேட முயன்றால் இறைவனால் தோற்கடிக்கப்படுவார்கள் எனபது சர்வ நிச்சயம். மேலும், புகல் இனாம் சொத்தை, சட்ட விரோதமாகக் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்த/பதிவுசெய்த அரசு ஊழியர்கள் அதற்குரிய பலனை விரைவில் எதிர்கொள்வர்.

"நல்லதுக்குக் காலமில்லை" என்பதைக் காலங் காலமாகக் கண்டுவருகிறோம். நம் சமகாலச் சான்றாக, அதிரையின் சித்தீக்பள்ளி என்றழைக்கப்படும் சின்னப்பள்ளியின் சொத்து விவகாரம் தலைதூக்கியுள்ளது.

கடந்த நான்காண்டுக் காலமாக சித்தீக் பள்ளியின் நிர்வாகக் குழுத் தலைவராகச் செயல்பட்டுவரும் ஹைதர் அலீ ஆலிமை நேற்றுவரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு, "ஆகா, ஓகோ" என்று புகழ்ந்துரைத்த அதே மேன்மக்கள், சட்ட விரோதமாகத் தங்கள் ஆளுகையின் கீழ்வந்த வக்ஃபுச் சொத்துகளின் வண்டவாளங்கள் வெளியானதும் அவரை இகழ்ந்துரைத்துத் தூற்றுவதும், அவருக்கு எதிராக அணிதிரள்வதும், அமர்வுகள் ஏற்பாடு செய்வதும், அவரை ஊரைவிட்டுத் துரத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதும் காலத்தின் கோலமல்லாமல் வேறென்ன?

 எப்படியாவது ஹைதர் அலீ ஆலிம்சாவைத் 'தூக்கி' விட்டால், பூதாகாரம் எடுத்து நிற்கும் வக்ஃபுச் சொத்து விவகாரத்தைத் திசை திருப்பிவிடலாம்; அல்லாஹ்வின் பள்ளிக்குச் சொந்தமானதைத் தங்களுக்கு ஹலால் ஆக்கிக் கொள்ளலாம் எனும் பகல் கனவோடு கையெழுத்து வேட்டை நடத்தி, சங்கங்களுக்கு மனு கொடுப்பதும் அறிந்தோ அறியாமலோ நடந்துவிட்ட தவறுகளை நியாயப்படுத்த முனைவதும் தொடர்வதால் ஹைதர் அலீ ஆலிம்சாவுக்கு அதிரைவாழ் நடுநிலையாளர்களின் ஆதரவு பெருகி வருவதாகத்தான் தெரிகிறது.

நேற்றுவரை இனித்தவர் இன்று கசக்கிறார்; கசக்க வேண்டிய வக்ஃபுச் சொத்து இனிக்கிறது. இனாம் சொத்து இத்துணை இனிக்குமோ?

(பயணிகளின் பிரார்த்தனை அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றாலும்) நெடுந்தொலைவு பயணம் செய்துவரும் ஒரு பயணி, தம் கரங்களை உயர்த்தி, “என் இறைவா! என் இறைவா!” என்று இறைஞ்சுகிறார். அவரது உணவு ஹராம்; அவரது குடிப்பு ஹராம்; அவரது உடுப்பு ஹராம்; அவரது வாகனம் ஹராம்; அவரது பிரார்த்தனை எவ்வாறு ஏற்கப்படும்?என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கேட்டார்கள் (முஸ்லிம்1015).

என்றாலும்,இந்த ஹதீஸில்“அவரது உறைவிடம் ஹராம் என்பது இந்த ஹதீஸில் இடம்பெறவில்லையே” என்று எந்த அதிபுத்திசாலியும் கேட்கமாட்டார் என நம்புவோமாக!

"நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதியை நிலைநிறுத்துங்கள்!..." (16:90) என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

அதிரை முஸ்லிம்கள் செய்யப் போவதென்ன?

-ஜமீல்

தொடர்புடைய பதிவுகள்:

online ulagam

About online ulagam -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!