Wednesday, June 9, 2010

அப்படி என்னதான் இருக்கிறது கே.எஃப்.சி. சிக்கனில்?

“ப்ரெட்பீஸ் மாதிரி சாஃப்ட். செம டேஸ்ட்” என்று இந்திய நகர்ப்புற மேல்தட்டு இளசுகளின் நாக்குக்கு மோகம் கூட்டுவது கே.எஃப்.சி. சிக்கன். நவீன வேலைப்பாடுகளோடு வடிவமைக்கப்பட்ட ரெஸ்டாரண்டுகள், பரிமாற சுறுசுறுப்பான இளைஞர்கள், உச்சஸ்தாயியில் ஒலிக்கப்படும் மேற்கத்திய இசை, டேபிள் முழுக்க இளசுகளின் ஆக்கிரமிப்பு என்று ஒவ்வொரு கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுமே பார்ட்டி மூடில் பரவசமாக இருக்கின்றன. சாப்பிட வருபவர்களை சத்தம் போட்டு அதிரவைத்து வரவேற்பதிலேயே கே.எஃப்.சி.யின் கஸ்டமர் கேர் தொடங்கிவிடுகிறது.
அப்படி என்னதான் இருக்கிறது கே.எஃப்.சி. சிக்கனில்?
“அது மட்டும் சீக்ரட்!” என்று சிரிக்கிறார்கள் ரெஸ்டாரண்ட் ஊழியர்கள். கே.எஃப்.சி. சிக்கன் உடம்புக்கு நல்லதாம். பதினோரு விதமான மசாலா சேர்மானம் டேஸ்ட்டுக்கு உதவுவதுடன், உடல்நலத்துக்கும் கேரண்டி தருகிறது என்கிறார்கள். இந்த சேர்மான விகித பார்முலா வேறு யாருக்குமே தெரியாதாம். கே.எஃப்.சி.யின் சீக்ரட் எக்ஸ்க்யூடிவ்களுக்கு மட்டுமே தெரியுமாம். எனவே, சிக்கன் சமைக்கும் அந்த பார்முலாதான் கே.எஃப்.சி.யின் ஸ்பெஷல்.

“இதெல்லாம் சும்மா. பொதுவாக சிக்கனை பொறிக்கும் எண்ணெய் அளவுக்கும், கே.எஃப்.சி.யில் பொறிக்கும் எண்ணெய் அளவுக்கும் சற்று வேறுபாடு உண்டு. அதுவுமில்லாமல் 200 டிகிரி செல்ஸியஸ் வெப்ப அளவில் ஒரு நிமிடம் பொறிக்க வைத்து, பிறகு 120 டிகிரி செல்ஸியசுக்கு வெப்பநிலையை குறைப்பார்கள். சர்க்கரை, மாவு, மிளகு, உப்பு – இதுதான் இவங்க சொல்ற சீக்ரட் பார்முலா” என்று வில்லியம் பவுண்ட்ஸ்டோன் என்பவர் பிக் சீக்ரட்ஸ் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். 1930ல் சாண்டர்ஸ் என்பவரால் அமெரிக்காவில் சிறியளவில் துவக்கப்பட்டது இந்த தொழில். மடமடவென்று வளர்ந்து முப்பது வருடங்களில் அமெரிக்காவிலும், கனடாவிலும் 600 கிளைகளாக பெருகியது கே.எஃப்.சி. இன்றைய தேதியில் கிட்டத்தட்ட நூறு நாடுகளில் ஆயிரக்கணக்கான கிளைகளோடு ஆலமரம் மாதிரி வளர்ந்து நிற்கிறது. உலகின் பெரிய உணவு நிறுவனங்களில் கே.எஃப்.சி.க்கு தனியிடம் உண்டு. ஓராண்டுக்கு சராசரியாக நூறு கோடி கோழிகள் கே.எஃப்.சி. கடைகளில் உயிரிழப்பதாக சொல்கிறார்கள்.

கே.எஃப்.சி.யில் பிரதானம் வறுத்த சிக்கன் தானென்றாலும், கிளைகள் அமைந்திருக்கும் நாடுகளுக்கேற்ப அந்தந்த பகுதியின் ஸ்பெஷல் உணவுகளையும், தங்களது டிரேட் மார்க் சுவையில் தருகிறார்கள். சாண்டர்ஸ் ஆரம்பித்த காலத்தில் வறுத்த கறியும், உருளை ப்ரெஞ்ச் சிப்ஸும் மட்டும்தான் ஸ்பெஷல்.

இந்தியாவிலும் பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுகள் திறக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பிஸ்ஸாஹட் ரெஸ்டாரண்டுகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அதற்கு எதிரில் அமையுமாறு கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுக்கு இடம் பார்க்கிறார்கள். இதென்ன லாஜிக் என்றே புரியவில்லை.

நன்றி :புஹாரி

1 comment:

  1. நாக்கில் எச்சி ஊருகிறது.
    ஆமா நீங்க தான் துக்ளக்கில் கேள்வி பதில் பகுதி வரும் அதிரை புஹாரிய

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!