Friday, February 5, 2010

அமைதிக்கான நோபல் பரிசுக்கு 'இன்டர்நெட்' பரிந்துரை!

2010ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டோரின் பட்டியலில் இன்டர்நெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பரிசைப் பெறப் போவது யார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

2010ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இன்டர் நெட் தவிர மேலும் 2 பேர் போட்டியில் உள்ளனர். இவர்களில் ஒருவர் சீனாவைச் சேர்ந்த லியூ சியோபோ. இவர் சீன அரசால் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்ட மனித ஆர்வலர்.

இன்னொருவர் ரஷ்யாவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான ஸ்வெத்லானா கன்னுஷ்கினா மற்றும் அவரது மெமோரியல் என்ற தொண்டு நிறுவனம்.

வைர்ட் (Wired) இதழின் இத்தாலிப் பதி்ப்புதான் இன்டர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற பரிந்துரையை முதலில் வைத்தது. தகவல் தொடர்பின் மூலமாக பேச்சுவார்த்தை, விவாதங்கள், ஒருமித்த கருத்துக்களை எட்டுவதற்கு இன்டர்நெட் பேருதவியாக இருப்பதால் இதற்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என வைர்ட் இதழ் பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி தனது இதழில் 'Wired Backs Internet for Nobel Peace Prize' என்ற தலைப்பில் இதுதொடர்பாக விரிவான கட்டுரை ஒன்றையும் அது பிரசுரித்திருந்தது.

அதில், இன்டர்நெட், செய்திகளைப் பரப்புவதிலும், விளையாட்டுக்களுக்கும் மட்டும் அல்லாமல், உலக அமைதிக்கான சக்தி வாய்ந்த மீடியமாகவும் விளங்குகிறது.

உலக மக்களிடையே நல்லதையும் விளைவிக்க இன்டர்நெட்டால் முடியும். தீயதையும் செய்ய முடியும். இன்டர்நெட் மூலம் ஒரு செய்தி இன்று உலக சமுதாயத்திடம் வெகு விரைவாக சென்றடைகிறது. இதை நாம் அமைதியை மக்கள் மனதில் தூவ, உலகில் நிலவச் செய்ய பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உலக மக்களிடையே நிலவும் துவேஷங்களைப் போக்க இன்டர்நெட் மிகப் பெரிய சக்தியாக விளங்கும்.

ஈராக்கில் நடந்த தேர்தலின்போது இன்டர்நெட்டின் பங்கு மிகப் பெரிதாக இருந்தது. உலக மக்களிடையே ஈராக் குறித்து பெரும் நம்பிக்கை ஏற்பட இன்டர்நெட்தான் உதவியது என்று கூறியிருந்தது.

அந்தக் கட்டுரைக்குப் பின் தற்போது அதிகாரப்பூர்வமாக அமைதிக்கான நோபல் பரிசுக்காக இன்டர்நெட் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வருகிற அக்டோபர் மாதம் அமைதிக்கான நோபல் பரிசை வெல்லப் போவது யார் என்று தெரிந்து விடும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!