Friday, July 30, 2010

துணிந்து நின்றால் பணிந்து வருவார்கள்

நபி(ஸல்) அவர்களது வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சிகளில்இஸ்ரா-மிஃராஜ் பயணம் முக்கியமானதாகும். ஒரே இரவில் நபி(ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீல் மூலமாக மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹறாமில் இருந்து பலஸ்தீனில் உள்ள பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்நிகழ்வு ‘இஸ்ரா’ என அழைக்கப்படுகின்றது.

பின்னர் அங்கிருந்து விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இது ‘மிஃராஜ்’ என அழைக்கப்படுகின்றது. இந்நிகழ்ச்சியை ஒட்டி எத்தகைய சடங்கு-சம்பிரதாயங்களையோ, வணக்க, வழிபாடுகளையோ இஸ்லாம் அறிமுகம் செய்யவில்லை. இந்நிகழ்வு பற்றிப் பேசுவோர் பல கட்டுக் கதைகளையும், பர்ன-பரம்பரைக் கதைகளையும் அவிழ்த்து விடுவர். மற்றும் சிலர் இஸ்ரா -மிஃராஜுடன் இணைத்து இல்லாத இபாதத்துக்களை உருவாக்கி பித்அத்துக்களை ஊக்குவிப்பர். எனினும், இஸ்ரா-மிஃராஜ் பற்றிப் பேசும் போது பைத்துல் முகத்தஸ் குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது.

‘பைத்துல் முகத்தஸ்’ என்பது முஸ்லிம் உம்மத்தின் முதல் கிப்லாவாகும். பலஸ்தீன பூமி அல்லாஹ்வின் அருள் பெற்ற பூமியாகும். ‘பைத்துல் முகத்தஸைச் சூழ உள்ள பூமியை நாம் பறக்கத் பொருந்தியதாக ஆக்கியுள்ளோம்’ என்று அல்லாஹ் கூறியுள்ளான். இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தளமாக பைத்துல் முகத்தஸ் திகழ்கின்றது. நபிகளாரின் இஸ்ரா-மிஃராஜின் ஒரு அங்கமான பைத்துல் முகத்தஸ், மனித இன விரோதிகளான இஸ்ரேல் வசம் சிக்கித் தவிக்கின்றது. அகழ்வாராய்ச்சியின் பெயரில் பைத்துல் முகத்தஸைச் சூழச் சுரங்கங்கள் தோண்டித் துலாவப்படுகின்றது. பலஸ்தீனத்தின் பூர்வக் குடிகள் ஆக்கிரமிப்புச் சக்திகளான இஸ்ரேலினால் திறந்த வெளிச் சிறைக் கைதிகளாக நடத்தப்படுகின்றனர்.

அமெரிக்காவும், பிரிட்டனும் கொண்ட கள்ளக் காதலால் கருத்தரித்த சட்ட விரோத நாடே இஸ்ரேலாகும். இதன் மொஸாட் அமைப்பும், அதன் கொலை வெறிக் கூட்டமான ஸியோனிஸ்டுகளும் உலகம் பூராகவும் போர்த் தீயை மூட்டி வருகின்றனர்.

இஸ்லாமிய உம்மத்துக்கு மட்டுமன்றி மனித இன விரோதிகளாகவே இஸ்ரேல்நடக்கின்றது. அதனது ஸியோனிஸ சிந்தனை என்பது அனைத்து இன மக்களையும் அடிமையாக்கும் சிந்தனை கொண்டதாகும்.

இஸ்ரேல் அரசும் அதன் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கும் அமெரிக்க, பிரிட்டன் நாடுகளின் அரசியல் தலைமைகள், பிர்அவ்னியச் சிந்தனையுடன் இஸ்லாமிய உம்மத்தின் குழந்தைகளைக் கொல்வதைக் கொள்கையாகக் கொண்டுள்ளன. ஈராக், ஆப்கான், பலஸ்தீன் என அனைத்து நாடுகளிலும் இந்த அரக்க நாடுகளின் ஈவு-இரக்கமற்ற, காட்டு மிராண்டித் தனமான தாக்குதல்களில் அதிகம் பலியானவர்கள் ஒன்றுமறியாக் குழந்தைகள்தான்.

‘பொருளாதாரத் தடை’ என்ற போக்கிரிச் சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு உணவு, பால் மா, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதைத் தடை செய்வதன் மூலம் இஸ்லாமியச் சந்ததியைக் கொன்றொழிக்கச் சதி வேலையில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்திப் பிறக்கும் குழந்தைகளையும் உடல் ஊனமுற்றவர்களாக்கும் கொடூரத்தை இந்த நாடுகள் செய்து வருகின்றன.

பலஸ்தீனை ஆக்கிரமித்து ‘இஸ்ரேல்’ என்ற சட்ட விரோத நாட்டை உருவாக்கியவர்கள், அதனை ஒரு யூத நாடு என நிருவுவதற்கான அகழ்வாராய்ச்சிகளை நடத்தி வந்தனர். அறுபது ஆண்டுகள் தோண்டித் துலாவியும் இது ஒரு யூத நாடு என்று நிருவுவதற்கு உருப்படியான ஒரு ஆதாரம் கூட அவர்களுக்குக் கிட்டவில்லை. இந்நிலையில் யூதர்களில் சிலரே ‘இஸ்ரேல் சட்ட விரோத நாடு!’, ‘இஸ்ரேலை உருவாக்கியமை யூத மதத்திற்கும் எதிரானது!’ எனக் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

பலஸ்தீனின் காஸாப் பகுதியை இஸ்ரேல் முற்றுகையிட்டுப் பலஸ்தீனப் பாலகர்களையும் பட்டினிச் சாவுக்குள்ளாக்கி வருகின்றது. மருந்துத் தட்டுப்பாட்டினால் மரணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

பட்டினி நிலை தொடர்ந்ததைக் கண்ட ஈரநெஞ்சம் கொண்ட உலக நாடுகள் உதவ முன் வந்த போதும் கூட கல்நெஞ்ச இஸ்ரேல் அதனைத் தடுத்து வந்தது. எகிப்து ஊடாக காஸா பகுதிக்கு உணவு வருவதை எகிப்து தடை செய்தது. பட்டினியின் கொடூரத்தால் சுரங்கப் பாதை அமைத்து காஸாவுக்கு உணவுகளைக் கொண்டு வரும் முயற்சியை எகிப்து கொடூரமாக நசுக்கியது. மதில்கள் அமைத்தும் சுரங்கப் பாதைகளுக்கு நச்சு வாயு அடித்தும் பிர்அவ்னிய சிந்தனையின் எச்ச-சொச்சத்தை எகிப்தின் அதிபர் நிரூபித்து வருகின்றார். முஸ்லிம் அல்லாத மனித நேயர்களின் மனிதாபிமான முயற்சிகளுக்குக் கூடத் தடை விதித்துப் பலஸ்தீனப் பட்டினிச் சாவுக்கு இஸ்ரேலுடன் இணைந்து எகிப்தும் வழிவகுத்து வருகின்றது.

காஸாப் பகுதிக்கு 2008 இல் S.S. Free gaza பயணய கப்பல் மூலம் சென்ற மனிதாபிமான உதவியின் பின்னர் எந்த உதவியும் சென்று சேருவதை இஸ்ரேலின் இதயமற்ற அரசு அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில்தான் பலஸ்தீன மக்களின் மரண ஓலமும், பட்டினிச் சாவும் சர்வதேச நாடுகளில் இதயமுள்ள மனிதர்களின் உள்ளத்தை உருக்கியது.

இஸ்ரேலினதும், எகிப்தினதும் முற்றுகையைத் தகர்த்து காஸா மக்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்க வேண்டும் என்பதற்காக ஒரு குழு தயாரானது.

பிரிட்டன், அயர்லாந்து, அல்ஜீரியா, குவைத், கிரீஸ், துருக்கி போன்ற நாடுகளைச் சேர்ந்த 6 கப்பல்கள் மே மாதம் 30 இல் சைப்பிரஸ் துறைமுகத்திலிருந்து காஸா நோக்கிச் சென்றது. இந்தக் கப்பலில் 50 நாடுகளைச் சேர்ந்த மனித நேயத் தொண்டர்கள் 700 பேர் பயணித்தனர். இதில் ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்ற மக்கள் தொண்டர்கள், பலஸ்தீன ஆதரவாளர்கள் என நாடு-அரசியல்-இன-மதம் அனைத்தையும் தாண்டிய மனித நேயம் கொண்டவர்கள் உள்ளடங்கியிருந்தனர். இந்தக் கப்பல்களில் 10,000 டொன் உதவிப் பொருட்கள் இருந்தன.

இந்தக் கப்பல் காஸா சென்றடைந்தால் பலஸ்தீன மக்களைப் பட்டினி போட்டுச் சாகடிக்கும் தனது சதிவலை முறியடிக்கப்பட்டு விடும். ஏனைய நாடுகளும் தொடர்ந்து உதவி செய்ய ஆரம்பித்து விடும் என்பதனால் இவர்களைத் தண்டிப்பதற்காகவும், இனி யாரும் உதவி-ஒத்தாசை என்று வந்து விடக்கூடாது என எச்சரிப்பதற்காகவும் இஸ்ரேல் இவர்களைத் தாக்கியது.

சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இஸ்ரேல் இராணுவத்தினரால் இவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். கப்பலில் பயணித்தவர்கள் சமாதான சமிக்ஞை காட்டியும் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து 19 பேரைக் கொன்று குவித்தது. இதில் 12 பேர் படுகாயமுற்றனர். காயப்பட்டு உயிர் தப்பியவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவார்.

சர்வதேசக் கடல் பரப்பில் சர்வதேசச் சட்டங்களைத் தனது கால்களுக்குக் கீழ் போட்டு மிதித்து விட்டு, மனித நேய மக்கள் தொண்டர்களைச் சுட்டுக் கொன்ற இஸ்ரேல் இராணுவத்தினர், அவர்களை நடுக் கடலில் தூக்கி வீசியுமுள்ளனர்.

தனது ஈவிரக்கமற்ற ஈனச் செயலை நியாயப்படுத்த வழமை போன்று ‘தற்காப்புத் தாக்குதல்’ எனப் பொய்களை அவிழ்த்து விட்டுள்ளது இஸ்ரேல். கப்பல்களில் இருந்தவர்கள் குண்டர்கள் அல்ல; மனித நேய மக்கள் தொண்டர்கள்! தாலிபான், அல்கய்தா போன்ற ஆயுதப் போராளிகள் அல்ல; சமாதானப் விரும்பிகள். முஸ்லிம்கள் அல்லாதவர்களும் அதில் அதிகம் இருந்தனர்.

இஸ்ரேலின் இதயத்தில் ஈரமற்ற இந்த ஈனச் செயலுக்கு எதிராக பலத்த எதிர்ப்பு உலகெங்கும் எழுந்துள்ளது. துருக்கி இஸ்ரேலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. அமெரிக்க சார்பு முஸ்லிம் நாடுகளுக்கு இந்நிகழ்வு அரசியல் ரீதியான சிக்கலை உண்டுபண்ணியுள்ளது.

இந்நிகழ்வு இஸ்ரேல் சர்வதேசச் சட்டங்களை மதிக்காத நாடு; அது எந்த அக்கிரமத்தைச் செய்து விட்டும் அதற்கு நியாயம் கற்பிக்க முனையும். இது வரை இஸ்ரேல் மேற்கொண்ட எல்லா பயங்கரவாத வன்முறை நிகழ்வுகளையும் ‘தற்பாதுகாப்புத் தாக்குதல்’ என்றுதான் நியாயப்படுத்தி வந்தது. இந்நிகழ்வின் மூலம் சர்வதேச சமூகத்தின் முன்னால் இஸ்ரேலின் கோர முகம் பளிச்செனத் தெரிய ஆரம்பித்துள்ளது.

எனினும், அமெரிக்காவின் அரசியல் ஒத்துழைப்புத்தான் இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டிப் போக்கிற்கும், இரும்புக் குணத்திற்கும் காரணமாகும். முஸ்லிம் தலைமைகள் துணிவுடனும், ஒன்றுபட்ட மனதுடனும் செயற்பட்டால் இந்த நிலையை மாற்ற முடியும். இதற்கு இலங்கை சிறந்த உதாரணமாகும்.

புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள்இலங்கையைப் பணிய வைக்கப் பாரிய அழுத்தங்களைக் கொடுத்தன. ஆனால், ஜனாதிபதி தலை வணங்காத தலைமையாக நின்று அதனை எதிர்கொண்டார். அதன் பின் அரசியல் மாற்றத்தின் மூலம் இலங்கையை அடிபணியச் செய்ய முயற்சி நடந்தது. அதுவும் பழிக்கவில்லை. இந்தியா, சீனா எனப் பிராந்திய அரசுகளுடன் இலங்கை நெருக்கத்தை அதிகரித்தது. இப்போது அமெரிக்காவே பணிந்து வர வேண்டிய சூழ்நிலை உருவானது. தற்போது அமெரிக்காவேஇலங்கையின் சில நடவடிக்கைகள் குறித்துத் தாம் திருப்திப்படுவதாக ஒரு தலைப்பட்சமான டயலொக் பேச வேண்டியேற்பட்டது. அமெரிக்காவுக்கு அரசியல் தேவை இருந்தால் பணிய வைக்கப் பயமுறுத்தும்; பயப்படவில்லை என்றால் பணிந்து வரும். இதற்கு வட கொரியாவும் ஒரு சிறந்த உதாரணமாகும்.

முஸ்லிம் உலகு அமெரிக்காவின் பொருளாதார முதுகெலும்பை முறிக்கும் முடிவுகளை எடுத்து, ஒன்றிணைந்து, துணிந்து குரல் கொடுத்தால் அமெரிக்காபணிந்து வரும். அமெரிக்கா பணிந்தால் இஸ்ரேலின் அராஜகமும், அக்கிரமமும் குன்றிக் குறைந்து விடும் எனத் துணிந்து சொல்லலாம்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!