Wednesday, June 2, 2010

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள்

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாக இன்னமும்ம் இரண்டு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் தென் ஆபிரிக்காவில் கோலாகலங்கள்,
இப்போதிருந்தே ஆரம்பமாகத் தொடங்கி விட்டன. ஜூன் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 11 ஆம் தேதி வரை 2010 உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகள் இடம் பெறவுள்ளன.
32 நாடுகள், 9 நகரங்களிலுள்ள 10 விளையாட்டு அரங்கங்களில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டிகளில் கலந்து கொள்கின்றன.உலகெங்கும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் நேரிலும் தொலைக்காட்சியிலும் இந்தப் போட்டிகளைக் கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழா என்று வர்ணிக்கப்படும் உலகக் கால் பந்தாட்டப் போட்டிகள் ஒரு ஆபிரிக்க நாட்டில் முதல் முறையாக நடைபெறவுள்ளன. ஆபிரிக்காவின் ஓர் அணி உலகக் கோப்பையை வெல்லுமா என்கின்ற எதிர்பார்ப்பு அந்தக் கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் இருக்கிறது.
இந்த விடயத்தில், மொழி, மதம், இனம், கலாசாரம், அரசியல், போட்டி பொறாமை என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஓர் ஒற்றுமை இருக்கின்றது.நன்மைதரும் போட்டிகள் 'ஃபுட்போல் ஃபோர் ஹோப்' - அதாவது 'ஒளிமயமான எதிர்காலத்துக்காக கால்பந்தாட்டம்' என்கின்ற லட்சியத்துடன் சர்வதேச கால்ப்பந்தாட்டச் சம்மேளனம், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை முன்னெடுத்துச் செல்கிறது.
தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் முடிந்த பிறகும், அது ஏற்படுத்தப் போகும் நன்மைகள் தொடரும் என சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனமான 'ஃபிஃபா' வின் தலைவர் செப் பிளெட்டர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் கல்வி, அதுவும் உதைப்பந்தின் மூலம். அதை விளையடும் இளம் வீரர்கள் மூலம், அவர்களின் ஆரோக்கியத்தின் மூலம் நன்மை ஏற்படப் போகிறது.
ஆரோக்கியம், கல்வி, உதைப்பந்து ஆகிய நன்மைகள் 2010 தொடங்கி 2015 ஆம் ஆண்டு வரை தொடரும். செப் பிளாட்டரின் இந்த அறிவிப்பு உலகமெங்கும் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த முன்னெடுப்பில் 'ஃபிஃபாவுக்கு உதவ உலகின் பல நாடுகள் முன்வந்துள்ளன. 'கால்பந்தின் மூலம் எதிர்காலம்' என்கிற இலட்சியம் ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள அனைவருக்கும் உதவும் என்றும்அவர் கூறியுள்ளார். இந்தத் திட்டங்கள் தென் ஆபிரிக்காவுக்கு மட்டும் உதவி செய்யும் என்றில்லை, ஆபிரிக்கக் கண்டம் முழுவதற்குமே பலன்தரும். ஆபிரிக்கக் கண்டத்தில் இந்த முன்னெடுப்பு நடைபெற்ற பிறகு உலகம் முழுவதும் இந்தத் திட்டம் எடுத்துச் செல்லப்படும்.
புதிய விளையாட்டரங்கங்கள் ஜூன் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 11 தேதிவரை நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை கால் பந்தாட்டப் போட்டியில் 32 நாடுகள் பங்கு பெறுகின்றன. அவை எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. போட்டிகள் 10 மைதானங்களில் நடைபெறும். இவை 9 நகரங்களில் அமைந்துள்ளன. கேப்டவுன், டர்பன், ஜோஹனஸ்பர்க், ப்ளூம்ஃபொண்டைன், போர்ட் எலிசபெத், நெல்ஸ்ப்ரூயிட், பொலக்வானே, ரஸ்டன்பர்க் மற்றும் பிரெட்டோரியா ஆகிய நகரங்களில் போட்டிகள் இடம்பெறவுள்ளன. போட்டிகளுக்காகப் பல புதிய விளையாட்டரங்கங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சாக்கர் சிட்டி. இந்த அரங்கில் தான் 2010 உலகக் கோப்பை போட்டியின் முதல் மற்றும் இறுதி ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன.
கலாபாஷ் எனும் மிகவும் புகழ் பெற்ற ஆப்பிரிக்க பானையின் வடிவத்தை மையப்படுத்தி இந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் 95,000 பேர் அமர்ந்து போட்டிகளைக் கண்டு ரசிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!