Saturday, August 7, 2010

நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது?

சுயமரியாதை

மனித சமுகத்தில் தோன்றக்கூடிய எல்லா பிரச்சினைகளும் முஸ்லிம்களுக்கும் ஏற்படும். முஸ்லிம்களுக்கும் அடுத்தவரிடம் கையேந்தக்கூடிய நிலை ஏற்படலாம். அந்த நேரங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும் நோன்பு கடமையாக்கப்பட்டது.

இன்று நம் நாட்டில் சுயமரியாதைக்காக பல்வேறு இயக்கங்கள் தன்னுடைய பொன்னான நேரத்தையும், பொருளாதாரத்தையும் செலவழித்து வருகின்றன. ஏனெனில் நம் நாட்டில் சாதியம் என்ற பெயரால் மிகப்பெரிய கொடுமை பெருஞ்சமுதாயத்திற்கெதிராக கட்டவிழ்த்து விடப்படுகிறது.

நாம் அவர்களின் விஷயத்தில் அவர்கள் விரும்பாதவரை தலையிடப் போவதில்லை. ஆனால்; இதில் முஸ்லிம்கள் மிகப்பெரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளார்கள். எந்த நிலையிலும் வயிற்றுப் பசியைக் காரணங்காட்டி யாரிடமும் அடிமைப்பட்டுவிடக்கூடாது மேலும் யாரையும் அடிமைப் படுத்திவிடவும் கூடாது. நமது சுயமரியாதை எப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என நாம் நினைக்கின்றோமோ அதே போன்று அடுத்தவர்களின் சுயமரியாதையையும் நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்
. (திருக்குர்ஆன் 17:70)

''மக்களே உங்களின் இரத்தமும், செல்வமும் மிக சிறப்பிற்குரியதாகும். அரபா நாளான இன்றைய நாளைப்போல! ஹஜ்ஜுடைய இந்த மாதத்தைப்போல! மக்காவுடைய புனிதத்தைப்போல!

நான் இறைவனின் செய்திகளை உங்களிடம் சொல்லிவிட்டேனா? இறைவனே நீயே இதற்கு சாட்சி. முஸ்லிமின் எல்லா உரிமைகளும் தூய்மையானது. அவன் இரத்தம், செல்வம், மானம் ஆகியவைகளும் புனிதமானது.'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்தில் விதாவில் உரை ஆற்றினார்கள்.

வயிறு பசித்து அடுத்தவனிடம் கையேந்தி அடிமைப்படாமலிருக்க நீண்ட பயிற்ச்சி தேவை. எந்த வகையான பயிற்ச்சியும் இல்லாததின் காரணமாகத்தான் நம்நாட்டில் தீண்டத்தகாதவர்களாகவும், காலணிவாசிகளாகவும் ஆகிப்போனார்கள். இந்த நிலை முஸ்லிம்களுக்கு எந்தக்காலத்திலும் ஏற்பாடாமலிருக்க ஒவ்வொரு வருடமும் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட பயிற்ச்சிதான் நோன்பு.

அடுத்தவரிடம் பசியின் காரணமாக அடிமைப்படும் அவல நிலை ஒருவேலை நமக்கும் ஏற்பட்டால்; 'ரமழான் மாதத்தில் பசியோடு மாத்திரம் அல்ல! பெருந்தாகத்தோடும் இருந்தேன். அற்ப ஒருபிடி சோறுக்காக என் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன். இறைவனல்லாத யாருக்கும் அடிமைப்பட்டுவிட மாட்டேன். பசியென்ன எனக்கு புதிதா? ரமழான் மாதம் முழுவதும் பசித்திருந்தேனே அப்போது யாரிடமும் அடிமைப்பட வில்லையே! இப்போது நான் ஏன் அடிமைப்பட வேண்டும். எக்காரணங்கொண்டும் எனது சுயமரியாதையை எதற்காகவும் அதிலும் குறிப்பாக வயிற்றுக்காக விட்டுக்கொடுக்கவே மாட்டேன்' என்ற வீரஉணர்வை நமக்கு ஊட்டக்கூடிய பயிற்ச்சிதான் நோன்பு.

பிச்சை எடுத்தல்:

நோன்பு கடமையாக்கப்பட்ட நோக்கத்தை ஆராய்ந்துவருகிறோம். இந்த நோன்பு எப்படியெல்லாம், எதற்கெல்லாம் பயிற்ச்சியளிக்கிறது என்று பாருங்கள்.

நீங்கள் தெருக்களில், கடைவீதிகளில் பார்த்திருப்பீர்கள். உடற்கட்டான மனிதன் பார்ப்பதற்கு ஆஜானுபாகுவான ஆள். சைக்கிளிலே கையை விட்டுவிட்டு தன் திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக சர்க்கஸ் சாகசங்களை செய்துகாட்டுகிறான். அதன் முடிவில் ஒரு டியூப்லைட்டை தரையில் வைத்துக்கொண்டு தன் நெஞ்சால் உடைத்துக் காட்டுவதையும் அதன் பின்னால் தன் வயிறை சுட்டிக்காட்டி எல்லாம் ஒரு ஜான் வயித்துகாகத்தான் என்று சொல்லிக் கொண்டே பிச்சை கேட்பதையும், இது போன்றே மோட்டார் சைக்கிளிலே வேகமாக ஓட்டிக்கொண்டு வந்து சாகசங்கள் செய்து காண்போரை வியக்கவைக்கும் திறமைகள் கொண்டவர்களும் அதன் முடிவில் கடைகடையாக எல்லா நபர்களிடம் பிச்சை கேட்பதையும், அதுபோன்றே கேட்பதற்கினிய குரல் பெற்றிருப்பதால் உடலில் எந்த ஊனமில்லாத நிலையில் பாட்டுப் பாடிக்கொண்டே வயிற்றில் அடித்துக்கொண்டு பிச்சை எடுப்பதையும் நாம் பார்த்திருப்போம்.

இப்படி கஷ்டப்பட்டு சாகசங்கள் செய்பவர்களுக்கு பிரச்சினையாக தெரிவதெல்லாம் ஒரு ஜான் வயிறும்இ பசியம்தான். இவர்கள் எப்படியெல்லாம் திறமைப் படைத்தவர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். சைக்கிள் ஓட்டுபவரை நாம் பார்க்கும்போது என்ன ஆகுமோ என நாம் பயந்து நடுங்குவோம். மோட்டார் சைக்கிள் ஓட்டுவரை பார்க்கும்போது சொல்லவேண்டிய தேவையே இல்லை. இவர்களை விட திறமையற்றவர்களாகிய பார்வையாளர்கள் மூன்று நேரமும் வயிறாற சாப்பிட்டுவிடுகிறார்கள். ஆனால் பிரமிக்கத்தக்க ஆற்றல் படைத்தவர்களுக்கு சோற்றுக்கு வழியில்லை என்றால் என்ன ஆச்சரியம்.

இவ்வளவு சாகசங்களையும் செய்துக்காட்டி பிச்சை எடுப்பதற்கு முன்னால் ஒரு நிமிடம் சிந்தித்;துப்; பார்த்திருந்தால் பிச்சை எடுப்பதற்கு அவர்களுக்கு மனது வருமா?. நமது செயல்களைப் பார்த்து பயப்படுகிற, ஆச்சிரியப்படுகிற இந்த மக்கள் நன்றாக சாப்பிடுகிறார்களே! நாம் ஏன் நமது திறமைகளை வெளிப்படுத்தி உழைத்து சம்பாதிக்ககூடாது! வாழ்வில் முன்னுக்கு வரக்கூடாது என ஒரு நிமிடம் அவர்கள் சிந்திப்பதற்கு அவகாசம் இல்லை. ஏன் இந்த இழிநிலை?. காரணம் அவர்களுக்கு முறையான பயிற்சி கிடையாது. மனோதத்துவ ரீதியாக தெம்பூட்டுவதற்கு பயிற்ச்சி அளிக்கப்படவில்லை. அவர்களும் தன்னை முறையான பயிற்ச்சிக்கு உட்படுத்திக் கொள்ளவில்லை.

ஒரு முஸ்லிம் வருடாவருடம் பயிற்ச்சியளிக்கப்படுகிறான் இது போன்ற நிலையை சந்திக்ககூடிய முஸ்லிம்கள் மனோதத்துவ பயிற்சி அளிக்கப்படுவதால் தன்னை வெகுவாக மாற்றிக்கொள்ள இயலும்.

இதை சொல்ல வேண்டிய கண்ணியமிக்க உலமாக்கள் ரமழான் மாதம் வந்து விட்டால்; பையை தூக்கிக்கொன்டு வந்துவிடுகிறார்கள். ஒரு மணி நேரம்; அல்லது மக்களது ஆர்வத்தை பொறுத்து அடுக்கடுக்கான வசனங்களால் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தி விட்டு மக்களிடம் கை ஏந்திவிடுகிறார்கள். சில கண்ணிமிக்க உலமாக்கள் இதற்காக பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையிருப்பதால் நோன்பும் வைப்பதும் கிடையாது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அல்லாஹ் பயணத்திலிருப்பவர்களுக்கு நோன்பு வைக்கவேண்டாமென சலுகை தந்துள்ளான் என தப்ஸீர் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இவர்கள் நோன்பின் நோக்கத்தை நன்றாக படித்தவர்கள் அந்தோ பாவம் மகத்துவம் உணராதவர்கள்.

எந்த நேரத்திலும் யாரிடமும் கையேந்தக் கூடாதுஇ எந்த நிலையிலும் நம் சுயமரியாதையை இழந்து விடக்கூடாது என்ற கருத்தில் வருகிற குர்ஆனின் வசனங்களையும், நபிமொழிகளையும் ஆராய்ந்தால் பிச்சை எடுத்தலை இஸ்லாம் எந்த அளவிற்கு வெறுக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!